நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

மெட்ரிக் பள்ளி துவங்க என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் துவங்க தனி நபர்களுக்கோ வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் கல்வி நிறுவனங்கள் துவங்க விரும்புபவர்கள் முதலில் ஒரு அறக்கட்டளை (Trust) அல்லது சங்கம் (Society) ஒன்றைத் துவங்கி அதற்கான அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். அதை மத்திய/மாநில அரசு பதிவு விதிகளின்படி மாவட்டப் பதிவாளர் / சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் அறக்கட்டளை அல்லது சங்கத்தின் அமைப்பு, நோக்கம், செயல்பாடுகள் மற்றும் அதற்கான விதிமுறைகள் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த செயல்பாட்டில் கல்வி நிறுவனங்கள் துவங்குவதற்கான நோக்கம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தமிழக அரசு விதிகளின்படி, மெட்ரிக் பள்ளி துவங்குவதற்கு ஊராட்சிப் பகுதியாக இருந்தால் 3 ஏக்கர் இடமும், பேரூராட்சிப் பகுதியாக இருந்தால் 1 ஏக்கர் இடமும், நகராட்சிப் பகுதியாக இருந்தால் 55 சென்ட் இடமும் அறக்கட்டளை அல்லது சங்கம் பெயரில் கிரயமாகப் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தது 50 வருட காலத்திற்கு குத்தகைக்குப் பெற்றிருக்க வேண்டும். இதற்கான பத்திரம் பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இந்த இடத்தில் உள்ளாட்சி அமைப்பில் கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டு பள்ளிக்கான அனைத்து வசதிகளுடனும் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்க வேண்டும். இந்த கட்டிடத்திற்கு கட்டிட உறுதிச் சான்றினை அரசு அங்கீகரித்துள்ள கட்டுமானப் பொறியாளரிட்ம் பெற வேண்டும். அதன்பின்பு அந்த பகுதி வட்டாட்சியரிடம் கட்டிடத்திற்கான உரிமம் பெற வேண்டும். மேலும் இந்த கட்டிடத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருப்பதற்கான சுகாதாரச் சான்றிதழை மாவட்ட சுகாதாரப் பணி இணை இயக்குனர் அலுவலரிடம் பெற வேண்டும். இதுபோல் கட்டிடத்தில் தீ விபத்துத் தடுப்புக் கருவிகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் அமைக்கப்பட்டு அதற்கான தீயணைப்புத்துறைச் சான்றிதழை கோட்ட தீயணைப்பு அலுவலரிடம் பெற வேண்டும்.

மேலும் அருகிலுள்ள துவக்க நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் மெட்ரிக் பள்ளி துவங்க தடையில்லாச் சான்றிதழ்கள் பெற வேண்டும். இது போல் மெட்ரிக் பள்ளி துவங்குவதற்கு விண்ணப்பிக்கும் போது முதலில் 1 முதல் 6 வகுப்புகள் மட்டும் துவக்க அனுமதி வழங்கப்படும் என்பதால் அந்த வகுப்புகளை நடத்த அறக்கட்டளை அல்லது சங்கத்திற்குப் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறது என்பதற்குச் சான்றாக அறக்கட்டளை அல்லது சங்கத்தின் பெயரில் வகுப்புக்கு ரூ20000/- வீதம் ஆறு வகுப்புகளுக்கு ரூ120000/- குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புத் தொகையாக அரசுடமையாக்கப்பட்ட / பட்டியலிடப்பட்ட வங்கியில் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்றிட வேண்டும். இது போல் அறக்கட்டளை அல்லது சங்கம் பெயரில் அரசுடமையாக்கப்பட்ட / பட்டியலிடப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு ஒன்று துவங்கி அதில் ஒரு வருடம் பள்ளி நடத்துவதற்குத் தேவையான பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.

அதன் பிறகு மெட்ரிக் பள்ளி துவங்க விரும்புபவர்கள் அந்த மாவட்டத்திற்கான மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து மேற்காணும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளருக்கு ஒரு படிவமும், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கு ஒரு படிவமும் என்று இரண்டு படிவங்களை மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் அளிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ1000/, ஆய்வுக் கட்டணம் ரூ2500/- மற்றும் நிர்வாகத்தின் பங்குத் தொகையாக ரூ10000/- ஆகியவை அரசுக் கருவூலத்தில் அவர்கள் குறிப்பிடும் கணக்கில் செலுத்திய உண்மைச் சலானை மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கான படிவத்திலும் நகலை மெட்ரிக் பள்ளி ஆய்வாளருக்கான படிவத்திலும் இணைக்க வேண்டும். இது போல் வங்கியில் செலுத்திய நிரந்தர வைப்புத்தொகை ரசீது நகல், வங்கியின் சேமிப்புக் கணக்கு நகலும் இணக்கப்பட வேண்டும்.

இது தவிர பள்ளிக்கான விளையாட்டு மைதானம், நூலகம் மற்றும் ஆய்வுக்கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோல் பள்ளிக்கான முதல்வர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். பள்ளிக்குத் தேவையான, தகுதி உடைய ஆசிரியர்கள் நியமிக்கத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கான விபரங்களும் விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் பள்ளிக் கட்டிடத்திற்கு நேரடியாக வந்து பார்வையிடுவதுடன் தாங்கள் அளித்த விபரங்கள் அனைத்தும் உண்மையா? என்பது குறித்து ஆய்வு செய்வார். அதன் பின்பு உங்கள் பள்ளிக்கான விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கான உங்கள் பள்ளியின் விண்ணப்பப் படிவத்தை, அவருடைய பரிந்துரையுடன் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கு மேற்பார்வைக்காக அனுப்பி வைப்பார். அங்கு விண்ணப்பத்தை ஆய்வு செய்து விதிமுறைகளின்படி சரியாக இருக்கிறது என்று கருதும் நிலையில் முதலில் மெட்ரிக் பள்ளி துவங்குவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதியைக் கொண்டு மெட்ரிக் பள்ளியைத் துவங்கி நடத்தலாம். பள்ளி துவங்கப்பட்ட பின்பு சில மாதங்களுக்குள் பள்ளிக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கக் கோரி அதற்கான விண்ணப்பப் படிவத்தை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் பெற்று மேற்காணும் வழியில் மீண்டும் விண்ணப்பித்துப் பெற வேண்டும். அதன் பிறகு வகுப்பு உயர்விற்கு 7 முதல் 8 வகுப்புகளுக்கும், 9 மற்றும் 10 வகுப்புகளுக்கும், மேல்நிலை வகுப்புகளுக்கும் மேற்காணும் வழிமுறையிலேயே அந்தந்த வகுப்புகளுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டு தனித்தனியாக விண்ணப்பித்து அதன் பிறகு அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

தோழி 
புதைனா
நன்றி- லெப்பைகுடிகாடு.காம்

0 comments:

கருத்துரையிடுக